செவ்வாய், 28 ஜூலை, 2015

கலாமுக்குக் கவிதாஞ்சலி


                                      உதிர்ந்த அக்னிச் சிறகு 

கடலன்னையின்மடிபிறந்து
மலைஅன்னையின் மடி சேர்ந்த
மாமேதையே!

 இந்தியாவின்  சூரியன் நீ !
இளைஞர்களின் உற்சாகம் நீ!
மாணவர்களின் இலக்கு நீ !
விஞ்ஞானிகளின் பெருமை நீ!
இந்தியாவின் விடிவெள்ளி நீ!

அக்னியைப் படைத்து
மாணவர் சிறகுகளை விரிக்கச் செய்த நீ!

எங்கே சென்றாய் நீ ?
ஏவிய ஏவுகணையைக் காணவா?
இந்தியாவின் புகழின் உயரம் காணவா ?
இளைஞர் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தவா?
அல்லது உலகோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கவா?

... ..... ...... ..... ...... ...... ..... ..... ..... .....

வார்த்தைகள் இல்லை!!!
உன்னை இழந்து தவிக்கின்றோம்...
வால்  அறுந்த பட்டமாய்!
வாடிக் கிடக்கின்றோம் நீர் இல்லாச் செடிகளாய்!

எங்களைக் காண  வா!!!!


                                                         --  இரா. சுப்பிரமணியன்,
                                                              பட்டதாரி ஆசிரியர் ( கணிதம்)
                                                              அரசு மேனிலைப்பள்ளி,
                                                              இலந்தக்கோட்டை

நரம்பிழந்த வீணை - கவிதாஞ்சலி


                                                    கலாமுக்குக் கவிதாஞ்சலி   


சாதாரண குடியில் பிறந்து
சாமானியனாகிவிட்ட
சரித்திர நாயகனே!  உன்
சாதனைகள் அளவிடற்கரியது. உமது
 போதனைகள் யாவும்
புடம் போட்ட தங்கமாய் -  இப்
பூவுலக மக்களைப்
பொலிவுறச் செய்யும்.

எல்லாரும் கனவு காணுங்கள் என்று
இளைய தலைமுறைக்கு எடுத்தியம்பி
அவர்களை எழுச்சியுறச் செய்த
இமாலய சிகரமே!

உமது அறிவியல் சாதனைகளால்
உலக நாடுகளில்
ஒப்பற்ற நாடாக
இந்தியத் திருநாட்டை
மாற்றி அமைத்த
மாமேதையே!
 உமது பிரிவு
இவ்வுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

நீ மண்ணை விட்டு மறைந்தாலும்
எங்கள் மனத்தில்
எந்நாளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்.

 வாழ்க நின் புகழுடல்! மேலும் வளர்க நின் புகழ்!

                                         -- கவிஞர். வ. கோவிந்தசாமி,
                                              இளநிலை உதவியாளர்,
                                                              அரசு மேனிலைப் பள்ளி, 
                                                              இலந்தக்கோட்டை.

காலத்தை வென்ற கலாம்

                                           
                                         காலத்தை வென்ற கலாம் -  இதய அஞ்சலி
       நீண்ட நாள் முழுவதும் கணத்திற்குக் கணம், நேர்மையாய் துணிவாய், உண்மையாய் , உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!
                                     -- அப்துல் கலாம் வியாழன், 16 ஜூலை, 2015

கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வுகள் 2015-2016

கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வுகள் 2015-2016

           இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் 15/7/2015 புதன்கிழமை அன்று பாரதப் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. 

            பிற்பகலில் கல்வி வளர்ச்சி நாள் விழாவுடன் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழாவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுமாக  முப்பெரும் விழா நடைபெற்றது.  இந்த விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. அ. வடிவேல் எம்.ஏ.,எம்.எட்.,எம்.பில்., அவர்கள் தலைமை ஏற்றுத் தலைமை உரை ஆற்றினார். பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர் திரு. வெ. பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

              பள்ளியின் தமிழ் ஆசிரியர் திருமதி. இரா.துர்க்காதேவி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.  மாணவர்கள் செல்வன்.இரா.கோகுல், செல்வி.ம.சசி ரேகா  ஆகியோர் காமராசரின் கல்விப் பணிகள் குறித்த உரை வீச்சு சிறப்பாக இருந்தது. கல்வி வளர்ச்சி நாள் குறித்த கலை இலக்கியப்  போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் புத்தகங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. 

              அடுத்து, கரூர் மாவட்டம், புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்து வரும் திரு. தி. கோபிநாத் அவர்களின் நண்பர்கள் குழுவினர் ஏழை எளிய மாணவர்களின் உதவிக்காகத் திரட்டிய நிதித் தொகை ருபாய் 6500/- இல் பத்து மாணவர்களுக்குச் சீருடைகளும், முப்பது மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.  மாணவர்களின் மொழித்திறன்களை வளர்ப்பதில் தமிழ் இலக்கிய மன்றம் முக்கியப் பங்கு வகிப்பதையும், மாணவர்கள் கல்வியுடன் நூல்கள் பல வாசித்து இலக்கியச் சுவை உணர்ந்து பண்பாட்டைப் பின்பற்றச் செய்வதையும் குறித்து முதுகலைத் தமிழ் ஆசிரியர் திருமதி.பாரதமணி அவர்கள் எடுத்துரைத்தார். மேலும் அவரே நன்றியுரை ஆற்றினார்.  பள்ளியின் பட்டதாரி தமிழ் ஆசிரியர் திரு. கொ.சுப. கோபிநாத் அவர்கள் விழாத் தொகுப்புரை ஆற்றி ஒருங்கிணைத்தார்.


செவ்வாய், 14 ஜூலை, 2015

சதுரங்க விளையாட்டுப் போட்டிகள்

சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் 

                    இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நேற்று 13/7/2015 திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

                   விளையாட்டுப் போட்டியைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. அ. வடிவேல் அவர்கள் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்குப் படிப்புடன் விளையாடும் அவசியம். அத்துடன் நம் தமிழகப் பாரம்பரிய விளையாட்டான சதுரங்கப் போட்டி மூளையின் செயல்பாட்டுக்கு வழிவகுப்பதுடன் சிந்தனையைத் தூண்டுகிறது என்றார்.

                  இந்த விளையாட்டுப் போட்டியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் குறுவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப் பட்டனர். விளையாட்டுப் போட்டிகளைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. பீட்டர் நெல்சன் ராஜ் அவர்கள் ஒருங்கிணைத்தார். 

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் - ஜூலை 2015

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்  - ஜூலை 2015

                  இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் நேற்று 13/7/2015 திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.அ. வடிவேல் அவர்கள் தலைமை ஏற்றார். இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஆ.மோகன் அவர்கள் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. வெங்கட்ராமன், பொருளாளர் திரு.ராமமூர்த்தி, கிராம கல்விக் குழுத் தலைவர் திரு. திருவேங்கடம் ஆகியோர் சிறப்பு வகித்தனர்.
                  இந்த நிகழ்வில் பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர் 160 பேர் பங்கேற்றனர். மாணவர்களின் கல்வித் தரம், பள்ளியின் சுற்றுச் சூழல், சுகாதாரம் முதலியன கூட்டப் பொருள்களாக அமைந்தன.  பள்ளியில் மேம்படுத்தப் பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப் பட்டன.   பள்ளியில் தற்போது துப்புரவுப் பணியாளர், இரவுக் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ஒருவரை நியமனம் செய்வது எனவும் அதற்கான நிதிப் பொறுப்பைப் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்பது எனவும் முடிவு எடுக்கப் பட்டது. மேலும் கடந்த ஆண்டில் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் பாராட்டப் பட்டனர்.  பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் துப்புரவுப் பணியாளர் நியமனம் செய்தமைக்கு அனைத்து ஆசிரியர்களின் சார்பிலும் நன்றி தெரிவிக்கப் பட்டது.