வியாழன், 5 மார்ச், 2015

விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள்


            விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள்

கடந்த 24/02/2015 அன்று இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளியின் தலைமையாசிரியர் திரு. அ. வடிவேல் அவர்கள் தலைமை வகிக்க  ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஆ. மோகன் அவர்கள் முன்னிலையில் போட்டிகள் நடத்தப்பட்டன.  தலைமையாசிரியர் மற்றும் ஊராட்சித்தலைவர் ஆகியோர் கொடி அசைக்கப் போட்டிகள் தொடங்கின. பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு. து.முருகேசன் மற்றும் தற்போது பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு. பீட்டர் நெல்சன் ராஜ் ஆகியோர் போட்டிகளுக்கான நடுவர்களாக இருந்தனர். பொது மக்களும் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களும் பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். கபடி, கைப்பந்து  மற்றும் கால்பந்து ஆகிய குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றியைத் தழுவிய வீரர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதக்கங்களையும் பாராட்டுச் சான்றுகளையும் வழங்கிக் கௌரவித்தார்.
     இந்த நிகழ்வில்  பங்கேற்ற பள்ளி மாணவர்கள் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் முதலான போட்டிகளில் வெற்றி பெற்றனர். அவர்களுக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. அ. வடிவேல் அவர்கள் பதக்கங்களையும் பாராட்டுச் சான்றுகளையும் வழங்கி ஊக்கமூட்டினார். கல்வியுடன் விளையாட்டும் மாணவர்களுக்கு முக்கியம் என்பதுடன் விளையாட்டுச் சாதனைகளுக்கு அரசு உயர்கல்வியிலும் பணி வாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி வாழ்த்துரை வழங்கினார்.