செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

பாரதம் காப்போம் - கவிதை

பாரத மணித்திரு நாடு – இது
பார் புகழ் தனித்திரு நாடு – இது
வீரம் விளைந்த நல்நாடு – இதன்
விடுதலையைக் கொண்டாடு 
ஆயிரம் சாதிகள் உண்டு – ஆயினும்
அனைவரும் ஒன்று – மனித
நேயமும் நிறையவே உண்டு – இங்கு
நீதியும் நேர்மையும் உண்டு  
மதங்களும் பலப் பல உண்டு – மனு
சாத்திரம் அதனிலும் உண்டு – இங்கு
விதவித மொழிகளும் உண்டு – இதில்
வித்தகம் நிறையவே உண்டு 
இயற்கையின் வளங்களும் ஏராளம் – இதில்
எழில்மிகு தளங்களும் தாராளம் – இங்கு
செயற்கை வளங்களும் பல உண்டு – இதன்
சிறப்பினை வெள்ளையன் கண்டு  
வாணிகம் செய்யவே வந்தான் – இதன்
வளமையைக் கண்டிவன் வியந்தான் – இது
பேணிட வேண்டிய செல்வம் – என்ற
பெருமையை அவன் உடன் உணர்ந்தான் 
தந்திர மாகவே பேசி – நம்
மன்னர்கள் மனத்தினை மாற்றி – நம்
இந்திய நாட்டினை அவனும் – உடன்
தன்வயப் படுத்தியே கொண்டான்  
சிறைப்பட்ட இந்திய நாட்டின் – வெகு
நிறைவான கனிம வளங்கள் – உடன்
யாவையும் கொள்ளை கொண்டான் – தேவை
யானதை அள்ளியே சென்றான் 
சிறைப்பட்ட இந்தியத் தாயின் – பல
செல்வங்கள் கொள்ளை போக – மனத்தில்
சினம் கொண்ட இந்திய வீரர் – பலர்
சிலிர்த்தெழுந்து ஒன்றெனச் சேர்ந்தார்  
அறவழியில் அண்ணல் காந்தியும் – மாறாய்
அதிரடியாய் சுபாஷ் சந்திர போசும் – உடன்
இருமுனைத் தாக்குதல் நடத்தி – வெள்ளையனை
மறுமுனை ஓடச் செய்தனர் 
வெள்ளையனை விரட்டி யடித்து – நம்
விடுதலையை வென்றெடுத்து – இந்திய
மண்ணின் மானம் காத்து – முன்னோர்
மகிழ்வுற வைத்தார் நம்மை 
இதைப் பேணிக் காத்திட வேண்டும் – இதன்
பெருமையைக் கொண்டாட வேண்டும்
சாதி மதங்களைக் கடந்து – நாம்
சமத்துவ வாழ்வினைத் தொடங்க
மனத்தினில் உறுதியும் கொள்வோம் – நாம்
மகிழ்வுடன் உலகினை வெல்வோம்
வாழ்க நம் இந்தியக் குடியரசு!
வளர்க நம் இந்தியப் புவியரசு! 
வாழ்க பாரதம்! வளர்க நம் சகோதரம்!
---கவிஞர். வ. கோவிந்தசாமி
இளநிலை உதவியாளர்,
அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை.