இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வியாழன், 9 ஏப்ரல், 2015

ஆசிரியர் - கவிதை ( கவிஞர். வ. கோவிந்தசாமி)



ஆசிரியர்

கண்கண்ட கடவுளரில்
அன்னை தந்தைக்குப் பின்
அவனியது போற்றுகின்ற
அருமைமிகு கடவுளராம் – ஆசிரியர்

மண்ணைப் பொன்னாக்கி
விண்ணை வசமாக்கிக்
கல்லைக் கனிய வைக்கும்
கலைத்திறம் பெற்றவராம் – ஆசிரியர்

உண்ண உணவும் தந்து
உடுக்க உடையும் தந்து
உடல்நலத்திலும் உள நலத்திலும்
அக்கறை கொண்டோர் – நம்
அன்னை தந்தையர்

உதிர பந்தத்தால் – நம்மிடம்
உறவு பாராட்டி
நாளை நமக்கிவன்
நல்லதொரு துணையாவான்
என்ற எதிர்பார்ப்பில் – நம்
அன்னை தந்தையர்

கொள்ளி வைக்க இவன் வேண்டும் – நாம்
கொண்டாட இவன் வேண்டும்
அள்ளி அணைக்க இவன் வேண்டும் – நம்
அந்திம காலத்தில் இவன் வேண்டும்
என்ற எதிர்பார்ப்பில் – நம்
அன்னை தந்தையர்

ஆனால்,
செவிக்கு இன்பம் தந்து
சிந்தைக்கு விருந்தளித்து – இப்
புவிக்குள் பெருமகனாய்
நம்மைப் புனரமைத்து
அறிவு ஜீவியாய் – இந்த
அகிலம் போற்றும் மேதாவியாய் – நம்மைப்
பரிமளிக்கச் செய்யும்
பரிசுத்தமான பொற்கொல்லராம் – ஆசிரியர்

தன்னலம் கருதாது
நம் நலனில் அக்கறை கொண்டு
எவ்வித எதிர்பார்ப்புமின்றிப்
பொதுநல நோக்குடனே

யாம் பெற்ற இன்பம்
பெருக இவ்வையகம் என்பதாய்
நமக்கு நல்லதோர் வாழ்வளித்து
நம்மை உயர்த்திப் பார்க்கும்
ஒப்பற்ற கடவுளராம் – ஆசிரியர்

கூழாங்கற்களையும்
குவலயம் போற்றும்
மாணிக்கமாய் மரகதமாய்
வைரமாய் வைடூரியமாய்
முத்து பவழம் புஷ்பராகம்
கோமேதகம் நீலமென
நவரத்தினங்களாய்  ஒளிரச் செய்து

அன்பு காட்டுவதில் அன்னை
நல்வழிப்படுத்தும் தந்தை
உதவிக்கு ஓடி வரும் நண்பன் – என்ற
முப்பெரும் உறவுகளின்
ஒப்பற்ற உருவமாம் – ஆசிரியர்

நீர் இன்றி அமையாது உலகு
என்பது உண்மை தான் – ஆசானே!
நீர் இன்றி அமையாது உலகு
என்பதும் உண்மைதான்

உமது வாழ்வு செழிக்கவும்
அதில் வளமை பெருகவும்
எல்லாம் வல்ல இறைவன்
நல்லருள் புரிவாராக!

குருவே துணை – அவர்க்குத்
திருவே இணை 

                       கவிஞர்.வ. கோவிந்தசாமி, 
                    இளநிலை உதவியாளர்,
                       அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டை 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக