இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வியாழன், 9 ஏப்ரல், 2015

பள்ளியின் ஆண்டறிக்கை 2014-2015



பள்ளியின் ஆண்டறிக்கை 2014-2015
அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,         திண்டுக்கல் மாவட்டம்

ஆண்டறிக்கை 2014-15

           “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்என்று கூறுகிறது தொல்காப்பியம். இன்று எல்லையளவில் சுருங்கிப் போயிருந்தாலும் புகழில் பீடுநடை போட்டு விளங்குகிறது  நம் தமிழகம். இதன் தென்திசையில் பாண்டிய நாட்டுடன் இருந்து பிற்காலத்தே திப்புச் சுல்தான் ஆட்சி செய்த பகுதி நம் திண்டுக்கல் மாவட்டம்.  மலைக்கோட்டை, சிறுமலை வாழைப்பழம், பூட்டு இவற்றுடன் தற்போது கல்வியிலும் சிறப்புப் பெற்று விளங்குகிறது நம் மாவட்டம்.  திண்டுக்கல் மாவட்டத்தில் தெய்வீக மணம் கமழும் பழனியை மையமாகக் கொண்டு செயல்படும் கல்வி மாவட்டத்தில் அடங்குவது நம் பள்ளி.  முற்காலத்தே இலந்தை மரங்கள் அதிகமாகக் காணப்பட்டதால் இலந்தக்கோட்டை என்று பெயர் பெற்ற இவ்வூரின் இயற்கையான சூழலில் வேம்பு, புன்கு மரங்களின் நீழலில் கலைமகள் மருவும் இடமாக இப்பள்ளி திகழ்கிறது.
          1982-ஆம் ஆண்டு வரை நடுநிலைப் பள்ளியாகச் செயல்பட்ட இப்பள்ளி 1983-இல் பள்ளிக்கல்வித்துறையால் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.  பின், 2001-ஆம் ஆண்டு இப்பள்ளி மேனிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.  திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக் கோடியாக இருப்பதனால் என்னவோ, இப்பள்ளி ஆண்டு தோறும்  புதுப்புது அணிமணிகளை அணிவது போன்றே புதுப்புது ஆசிரியர்களை ஏற்றுப் புதுமையுடனும் புத்துணர்வுடனும் விளங்குகிறது. 

2014-15 ஆம் கல்வியாண்டு:

         சமச்சீர்க் கல்வி கொண்டு வரப்பட்ட பின் பரபரப்பாக நடை பயின்ற இந்தக் கல்வியாண்டில் 20/06/2015 முதல் திருமதி.க.செ.அருள்ஜோதி எம்.எஸ்சி.,எம்.எட்.,எம்.பில்.,அவர்கள் தலைமையாசிரியராகப் பதவியேற்றார்.பின் இவர் பணியிட மாறுதலில் செல்ல திரு.அ.வடிவேல் எம்.ஏ.,எம்.எட்.,எம்.பில்.அவர்கள் 31/10/2014 அன்று பதவியேற்றார்.  இக்கல்வியாண்டில் மேனிலைக் கல்வி பயிற்றுவிக்க ஆறு முதுகலை ஆசிரியர்களும், இடைநிலைக் கல்வி பயிற்றுவிக்க ஒன்பது பட்டதாரி ஆசிரியர்கள்  மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர், கலையாசிரியர் என மொத்தம் பதினோரு  ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். பள்ளி அலுவலகத்தில்  இளநிலை உதவியாளர் ஒருவர் பணிபுரிகின்றார். பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் துப்புரவாளர் ஒருவரும் பணியாற்றிவருகிறார்.  
            இப்பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் மொத்தம் 390 மாணவர்கள் படித்து வருகின்றனர். 6 முதல்  10ஆம் வகுப்பு வரையிலும்  276  மாணவர்கள் உள்ளனர்.  மேனிலைப் பிரிவில் 114   மாணவர்கள் உள்ளனர்.  மேனிலைக் கல்விப் பிரிவில் உயிரி கணிதம், கணினியியல் ஆகிய இரண்டு பிரிவுகள் தமிழ் வழியில் பயிற்றுவிக்கப் படுகின்றன.

தேர்ச்சி நிலை:

          குஜிலியம்பாறை வட்டத்தில் தேர்ச்சி நிலையில் சிறப்புப் பெற்று விளங்கும் இப்பள்ளி கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 84%  விழுக்காட்டையும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில்  96% விழுக்காட்டையும்  பெற்றுள்ளது.  கடந்த ஆண்டு +2 பொதுத்தேர்வில் 989/1200        மதிப்பெண் பெற்று வி.முருகானந்தம் எனும் மாணவன்  முதலிடத்தையும்பத்தாம் வகுப்பில் 462/500     மதிப்பெண் பெற்று தி.பிரீத்தி  எனும் மாணவி முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.    இப்பள்ளியில் படித்துச்சென்ற மாணவர்கள் இன்று பொறியாளர்களாக, மருத்துவர்களாக,கல்வித்துறையில் உயர் அதிகாரியாக, ஆசிரியர்களாக விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நலத்திட்ட விவரம்:

                    2014-15 ஆம் கல்வியாண்டில் தமிழக அரசு வழங்கும் பள்ளிக்கான நலத்திட்டங்கள் அதிவிரைவாகப் பெற்று வழங்கப்பட்டுள்ளன.    விலையில்லாப் பேருந்து பயண அட்டை 382   மாணவர்களுக்கும், விலையில்லாப் பாட நூல்கள், பாடக் குறிப்பேடுகள் 390   மாணவர்களுக்கும்  +1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி 60  மாணவர்களுக்கும் +2  மாணவர்களுக்கு மடிக்கணினி 46   மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. விலையில்லா மடிக்கணினி மற்றும், மிதிவண்டிகள்  மாண்புமிகு வேடசந்தூர் சட்ட மன்றத் தொகுதி உறுப்பினர் திரு.எஸ். பழனிச்சாமி அவர்களைச் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்ட விழாவில் வழங்கப்பட்டது. தற்போது பயிலும் +2  மாணவர்கள்  54 பேருக்கு மடிக்கணினி கேட்டுப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  பள்ளியில் இடைநிற்றல், தேக்கம் இவற்றை நீக்கத் தமிழக அரசு செயல் படுத்திவரும் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பிற்கு 58   மாணவர்கள்,  +2 விற்கு 54  மாணவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.  ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இக்கல்வி ஆண்டில் 260   மாணவர்கள் தினசரி சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

பள்ளியில் பாட இணைச்செயல்பாடுகள்:

                     தேசியக் கலைத்திட்டம்-2005    மாணவர்களுக்குப் படிப்புடன் மதிப்பீட்டுக் கல்வி உள்ளிட்ட பாட இணைச் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப் பரிந்துரைத்துள்ளது. மேலும், சமச்சீர்க்கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முப்பருவமுறைக் கல்வியில் மாணவர்களின் கற்றலுடன் சமூக மதிப்பீடுகளை அறியும் வகையில் நம் பள்ளியில் பல குழுக்கள் செயால்படுகின்றன. அவை,  
 தமிழ் இலக்கிய மன்றம், ஆங்கில இலக்கிய மன்றம்கணிதக்கழகம்அறிவியல் மன்றம்சமூகவியல் மன்றம்நுண்கலை மன்றம், தேசிய பசுமைப் படைசெஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம், சாரணர் இயக்கம் என்பன.
      இவற்றில் பள்ளியின் தலைமையாசிரியர் தலைவராகவும், பொறுப்பு ஆசிரியர் உறுப்பினர் செயலராகவும், மாணவர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.  ஒவ்வொரு வாரமும் இக்குழுக்கள் ஆலோசனை நல்கி நல்லாளுமையுடன் மாணவர்கள் திகழ வழிகாட்டுகிறது.   வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர் மன்றம் கூட்டப்பட்டு திருவிழா நிகழ்வு போல மாணவர்களின் படைப்பு வெளிப்பாடுகள் வெளிக்கொண்டு வரப்படுகின்றன.
                    தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் ஒவ்வொரு விழாவின் போதும் கட்டுரை, பேச்சு, ஓவியம் முதலான போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப் பட்டுள்ளன. தமிழாசிரியர் திரு.கோபிநாத் அவர்கள் இம்மன்றத்தின் பொறுப்பாளராக இருந்து வழிநடத்தி வருகிறார். தமிழாசிரியர் திருமதி.இரா.துர்கா தேவி  அவர்கள் மாணவர் மன்றத்தைச் சிறப்பாக நடத்தி வருகிறார்.  ஆங்கில இலக்கிய மன்றத்தில் ஆசிரியர் செல்வி. ஐஸ்வர்யா அவர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் உரையாடுவது, தயக்கமின்றிப் பேசுவது போன்ற பயிற்சியை நல்கி வருகிறார். கணிதக் கழகத்தில் ஆசிரியர் திரு. முருகன் அவர்கள் பல்வேறு புதிர்க் கணக்குகளை அறிமுகம் செய்து மாணவர்களின் அறிவைப் பட்டை தீட்டி வருகிறார்.  அறிவியல் மன்றத்தின் சார்பில் ஆசிரியர் திருமதி சகுந்தலா அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் அறிவியல் கண்காட்சியை சிறப்பாக நடத்தினார்
          பெண்கள் வன்கொடுமை தவிர்க்கும் மன்றம் ஆசிரியர் திருமதி.காந்திமதி அவர்களின் பொறுப்பிலும்தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஆசிரியர் திரு.வீ.முத்துசாமி அவர்களின் பொறுப்பிலும் இயங்கி வருகிறது.  சுற்றுச்சூழல் மன்றம் ஆசிரியர் திரு. பீட்டர் நெல்சன் ராஜ் அவர்களால் பசுமையுடன் பராமரிக்கப்பட்டுவருகிறது. நுண்கலை மன்றம் கலை ஆசிரியர் திருமதி. சாந்தி அவர்களின் பொறுப்பில் சிறப்பாக இயங்கி வருகிறது. இளநிலைஉதவியாளர் திரு.வ. கோவிந்தசாமி அவர்கள்பள்ளியின் ஒவ்வொரு நிகழ்விலும் கவிதை வாசித்துத் தனது கவித் திறமையை வெளிக்கொணர்கிறார். 
         செஞ்சுருள் மன்றத்தின் சார்பாக ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு வளரிளம் பருவக் கல்வியை ஆசிரியர்கள்  திருமதி. பாரதமணி, பாண்டீஸ்வரி, ஜெயா  மற்றும் திருமதி.செ.ஷாலினி ஆகியோர் வழங்கி வருகின்றனர்.  வளரிளம் பருவக் கல்வி சார்பில் வட்ட அளவில் நடத்தப் பட்ட கட்டுரைப் போட்டியில் மாணவர்கள் சசிரேகா, பூமிகா, ஓவியப் போட்டியில் மாணவர் உமா ஷங்கர் ஆகியோர் முதல் இடத்தைப்பெற்றுள்ளனர். 
        தேசிய பசுமைப் படை சார்பாக மாணவர்களுக்குப் பச்சை  வண்ணச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.  மேலும், பள்ளியில் மரக் கன்றுகள் நடப் பட்டுள்ளன. இந்த அமைப்பின் பொறுப்பாளராக ஆசிரியர் திரு. சௌந்தரராஜன் அவர்கள் சிறப்பாக வழிநடத்துகிறார்.    செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் இயக்கம் ஆகிய அமைப்புகள் ஆசிரியர்கள் திரு.சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர் செல்வி. விஜயப் பிரியா ஆகியோரைப் பொறுப்பு ஆசிரியர்களாகக் கொண்டு செயல்படுகின்றன.  உள்ளூரில் கோவில் திருவிழாவில் மாணவர் ஒழுங்கு குழு செயல்பட்டது. மேலும், மழைநீர் சேகரிப்பு,  டெங்கு, பாலித்தின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணியிலும் கலந்து கொண்டனர். 

முக்கியமான நிகழ்வுகள்:

            பள்ளியில் ஜூன் மாதம் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.  இதில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்களின் அனைத்துப் பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.  தேர்வில் நூற்றுக்கு நூறு விழுக்காடு பெறுவது, பள்ளியில் ஒழுங்கு நடைமுறைவீட்டில் பெற்றோர் தம் குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.   அடுத்து ஜூலை பதினைந்தாம் நாள் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.  பல்வேறு போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டன.  
           சுதந்திர நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  ஊரில் உள்ள பல்வேறு நற்பணி மன்றத்தினர் சார்பில் ரூபாய் இருபதாயிரம் செலவில் பல்வேறு பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கிச் சிறப்பிக்கப் பட்டனர்.  அன்று பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு கூடி பள்ளியின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து முக்கிய முடிவெடுத்தனர்.
                பிப்ரவரி முதல் வாரத்தில் சமூக நலத் துறையின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, சுகாதாரம், உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஒவ்வொரு வாரத்தின் வியாழக் கிழமைகளில் அனைத்து மாணவர்களுக்கும் இரும்புச் சத்து மாத்திரைகள் சுகாதார நிலையத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. 10/2/2015 அன்று பள்ளிக் கல்வித் துறையின் நெறிக்காட்டலில் மாணவர்களுக்குக் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
                         இதனைத் தொடர்ந்து நம் பள்ளித் தலைமையாசிரியரின் முயற்சியாலும்  ஊர்ப் பொது மக்களின் ஒத்துழைப்பாலும் பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் திரட்டத் திட்டமிடப்பட்டன.  அவ்வகையில் இலந்தக்கோட்டை  மாணிக்கபுரம் கருப்பசாமி அவர்களின் கருணையால் நிதி திரட்டப் பட்டு பள்ளி அலுவலக உதவிக்குத் துணை புரியும் வகையில் ஜெராக்ஸ் மற்றும் அச்சிடும் கருவி வழங்கப்பட்டுள்ளது. 
         இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் திரு. ஆ. மோகன் அவர்களின் முயற்சியால் பள்ளி வகுப்பறைக்குத் தேவையான எட்டு இரும்பு மேஜைகள் பெறப்பட்டுள்ளன.

  பள்ளிக்கான புதிய வலைப் பக்கம் :

                2013  நவம்பர் 14 அன்று நம் பள்ளிக்கேனப் புதியதோர் வலைப் பக்கம்  உருவாக்கப்பட்டுள்ளளது.  திண்டுக்கல் மாவட்டப் பள்ளிகளிலேயே இது புது முயற்சி ஆகும்.  www.landhakottaighss.blogspot.in   எனும் வலை முகவரியுடன்நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச்சாளரமாய் இது வலம்வந்து கொண்டிருக்கிறது.  இதில் நம் பள்ளியின் முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புகள்மாணவர்களின் படைப்புகள்ஆசிரியர்களின் சாதனைகள்ஆசிரியர்களின் கட்டுரைகள் மாணவர்களின் கற்றல் பகுதிகள் என  இதுவரை ஐம்பத்து நான்கு இடுகைகள் வெளியிடப்பட்டுள்ளன.   3900க்கும் அதிகமான பக்கப் பார்வைகளை நம் பள்ளிக்கான வலைப்பக்கம் கடந்துள்ளது.  இவ்வலைப்பக்க உருவாக்கத்தில் நம் பள்ளியின் கணினி ஆசிரியர் திருமதி. இல.கோகிலா, மற்றும் தமிழாசிரியர் திரு. கே.எஸ்.கோபிநாத் ஆகியோர் சிறப்பாகப் பங்கேற்று அதனைப் புதுப்பித்து வருகின்றனர்.

சிறப்பு வகுப்புகள் :

               மாணவர்களின் கல்வித்தேர்ச்சியை அதிகப்படுத்தும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.   தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் பாட வாரியாக நடத்தப்படுகின்றன. ஆதிதிராவிட மாணவர்களுக்கும் தனியாகச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. விடுமுறைக் காலங்களிலும் இவ்வகுப்புகள் தடையின்றி மாணவர் நலன் கருதித் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளன.

               2014-15 ஆம் கல்வியாண்டு இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளி கல்வியில் பல சாதனைகளைக் காணஉள்ளது.   கல்வி அழகும், கலை அழகும் பாரம்பரியமும் கொண்ட இப்பள்ளி வரவிருக்கும் அரசுப் பொதுத்தேர்வுகளில் நூற்றுக்கு நூறு விழுக்காடு வெற்றி பெற்றிடும் நோக்கில் தலைமையாசிரியர் திரு. அ. வடிவேல் எம்.ஏ.,எம்.எட்., எம்.பில். அவர்களின் வழிகாட்டலுடன் அனைத்து ஆசிரியர்களும் சிறப்புறச் செயல்பட்டு வருகின்றனர்.

1 கருத்து:

  1. எனது சொந்த ஊர் ஆனைப்பட்டி. நான் சென்னையில் வசிக்கிறேன். எங்கள் பக்கத்து ஊர் பள்ளிக்கு ஒரு வலைப்பூ உருவாக்கியிருப்பது கண்டு பெருமை கொள்கிறேன். நிச்சயம் இது மாணவர்களை இணையத்தை நோக்கிய நேர்மறையாக ஈர்க்கும் என்று நம்புகிறேன். திரு கோபிநாத் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு