இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

புதன், 1 ஜனவரி, 2014

தூவும் மழையும் அளபெடையும் - தமிழாசிரியர் கொ.சுப. கோபிநாத்

           “அடடா அடடா அடை மழைடா” என்று இனி வரும் காலங்களில் இளைய சமுதாயம் படங்களில் தான் மழையைப் பாரக்கமுடியுமோ என்ற அளவிற்கு மழை பொய்யெனப் பெய்து வருகிறது.  இந்த உலகம் இயங்க மழைநீர் ஆதாரமாக இருப்பதால் தான் அதனைப் பூலோக அமிழ்தம் என்றார் திருவள்ளுவர். வான் சிறப்பு அதிகாரத்தில் அனைவரும் அறிந்த குறட்பா, 
                 “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
                  துப்பாய தூஉம் மழை”.
இந்தக் குறட்பாவை எவரும் “தூவும் மழை” என்றே வாசிக்கின்றனர். “தூஉம்” என்பதில் உள்ள அளபெடையைப் பலரும் மறந்துவிட்டனர் போலும்!
     உண்பவருக்குத் தேவையான உணவுப் பொருள்களை விளையவைப்பதுடன், தானும் உணவாக ஆனது மழை நீர்.   துப்பு + ஆயதூஉம்  = துப்பாய தூஉம் எனச் செய்யுளில் நிற்கிறது. எனவே, துப்பு ஆயதூஉம் எனச் சரியாக அசை பிரித்து வாசித்தால் பொருளில் பிழைபடாது. இல்லையேல் செய்யுளில், மழை மட்டுமே தூவுமே தவிர “மழை நீர் உணவு” என்ற பொருள் வராது.
     தமிழில் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துகள் உண்டு.  இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துகள் உண்டு. மூன்று மாத்திரை ஒலிக்கும் எழுத்து என்று தனியாக இல்லை.. அவ்வாறு ஒலித்திட நேர்கின்ற போது நெடிலுக்கு இணையான இன எழுத்தைப் பக்கத்தில் இட்டு எழுத வேண்டும் மேலும், அந்த ஒலி தனித் தனியே, அதாவது ஆ-அ, ஈ-இ , ஊ-உ, ஏ-எ, ஓ-ஒ, ஐ-இ என விட்டிசைக்காமல் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ என நீட்டி ஒலிக்க வேண்டும்.  அளபெடையை நீருடன் நீர் கலந்தாற்போல ஒலிக்கவேண்டும். இந்த இலக்கணம் கூறும் போதே தொல்காப்பியர்,
            “நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
            கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் “
என்று நம்மை அளபெடைப்  பயிற்சியில் ஈடுபடுத்தச் செய்கிறார்.
எனவே, ஒலிப்புமுறையைச் சரியாகக் கற்றுத் தந்தால்  தமிழின் நீர்மை இனிமையினும் இனிமையே!


கே.எஸ். கோபிநாத், 
தமிழாசிரியர், 
அரசு மேனிலைப்பள்ளி,இலந்தக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக