ஞாயிறு, 24 நவம்பர், 2013

தலைமையாசிரியரின் சாதனைப் பயணங்கள்

        “அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றார் பாரதியார்.  கல்விப் பணியே மகத்தான பணி. மனிதன் சமூகத்தில் பெரும் புகழும் பெற்று விளங்கக் கல்வி அவசியமாகும். வாழ்வில் ஒளி ஏற்றும் கல்வியைக் கற்பிக்கும் பணியில் தன்னிறைவு கொண்டவராகச் சாதனைகள் பல நிகழ்த்தியவராகத் திகழ்கிறார் நம் பள்ளித் தலைமையாசிரியர் திரு. பா. கதிரேசன் எம்.ஏ.,எம்.எட். அவர்கள்.  

பயிற்றல் பகலவன் விருது:  
1991  ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியராகச் சேர்ந்தார் நம் தலைமையாசிரியர்.  “ கடன்என்ப நல்லவை எல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு” என்பார் திருவள்ளுவர்.  எடுத்துக் கொண்ட செயலைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் வல்லமை பெற்ற தன்மையினராக நம் தலைமையாசிரியர் ஆரம்பம் முதல் பல முறை நூறு விழுக்காடு தேர்ச்சி காட்டியமையால் கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு. பிரபாகரன் ஐ.ஏ.எஸ்.  மற்றும் நெல்லிக்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு தாமோதரன் அவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றார்.  மேலும், கடலூர் மாவட்டம் பன்னாட்டு அரிமா சங்கம் இவருக்குப் “ பயிற்றல் பகலவன்” எனும் விருதினை வழங்கிக் கௌரவித்துள்ளது.

யோகாசனம் மற்றும் தியான வகுப்புகள் : 
நம் தலைமையாசிரியர் யோகாசனக் கலையில் தேர்ந்தவர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர்.  யோகக் கலையின் தேஜஸ் நம் தலைமையாசிரியரின் முகத்தில் இயல்பாகவே உள்ளது.   இவர் கடலூரில் பணியாற்றி வரும் போதே அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ஆசிரியர்களுக்கு யோகாசனம், தியானம், இயற்கை உணவுப் பயிற்சி அளிக்கும் கருத்தாளராகப் பங்கேற்றுள்ளார்.   
பல்வேறு சமூகச் சாதனைகள்
        எய்ட்ஸ் விழிப்புணர்வு, குருதி,கண் கொடை விழிப்புணர்வு, கார்கில் நிவாரண நிதி, சுனாமி நிவாரண நிதி திரட்டி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைத்தமை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, சாலை பாதுகாப்பு, சுகாதார மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, புராதனச் சின்னங்கள் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்திச் சாதனை புரிந்துள்ளார். 

தலைமையாசிரியர் பணியில் சாதனைகள்:    
 மரபை மாற்றிய மாமனிதர்: 
         நம் தலைமையாசிரியர் தேனி  மாவட்டத்தில்  உயர்நிலைப் பள்ளி ஒன்றில் பொறுப்பேற்றிருந்த போது சுற்று வட்டாரப் பகுதியில் ஒருவித கலாச்சாரம் நிலவி வந்தது. அதாவது,  மாணவர்கள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கூத்தாடச் செல்வாராம்.  அவ்வாறு செல்வதால் அவ்வினத்தில் சீர்வரிசை எனப் பல கிடைத்ததாம்.  இதனால், பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு குறைந்திருந்தது.  அப்போது நம் தலைமையாசிரியர் திரு. கதிரேசன் அவர்கள் தலையிட்டு சுற்று வட்டார ஊர்ப் பிரமுகர்களை அணுகிக் கலந்துரையாடிக் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதன் விளைவாக அம்மக்கள் வழக்கமாகப் பிப்ரவரி மாதம் நடைபெறும் உள்ளூர்த் திருவிழாவை  ஏப்ரல் மாதம் மாற்றி அமைத்தனர்.  இம்மாற்றத்தை நிகழ்த்தியது நம் தலைமையாசிரியரின் சாதனைப் பயணத்தில் ஒரு மைல் கல் எனலாம்.


இயக்குனர் பாரதிராஜவுடன் இணைந்த சாதனை: 
        
      மழை நீர்க்கு மரமே ஆதாரம் என அரசு மரம்  நடுதலில் அக்கறை காட்டிவருகிறது. இச்சூழலில் பள்ளிகளில் மரக்  கன்றுகள் பல நடப்பட்டாலும் அவற்றில் உயிர் பிழைத்துத் தழைப்பவை  மிகச் சொற்பமே.  ஆடுகள் மேய்தல்,  மக்களின் அலட்சியம், மிதிபடுதல் போன்றவற்றால் மரக்  கன்றுகள்  தழைப்பதில்லை.  தேனி மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில்  இயக்குனர் பாரதிராஜாவை அணுகித் தம் பள்ளியில் மரம் நடு விழாவில் பங்கேற்க  அழைத்தார்.  இதன் தாக்கமாக, “தெக்கத்தி பொண்ணு “ நாடக நடிகர்களான போஸ், பரந்தாமன், கோடாங்கி, துரைசிங்கம் ஆகிய கதாப் பாத்திரங்களைக் கொண்டு பள்ளி வளாகத்தில் ஐந்நூறு மரக் கன்றுகளை நட்டார்  அம்மரங்கள் உள்ளவரை நம் தலைமையாசிரியரின் சாதனைகளைப் பேசும். 
       இவ்வாறு எண்ணற்ற  சமூகத் தொண்டுகளுடன் கல்வியிலும் சிறப்பான தேர்ச்சி விழுக்காட்டைக் காட்டிடும் நம் தலைமையாசிரியர் திரு. பா. கதிரேசன் அவர்களின் சாதனைப் பயணம் தொடர்கிறது....                         

1 கருத்து:

  1. ஆசிரியர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தலமையாசிரியருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு